
நான் இந்தியா சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இப்போது வீடு திரும்ப ரொம்ப ஆசை. சென்ற முறை வீடு சென்ற போது இரண்டு மாதம் ஆன உடனே மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்ற ஆசை. ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனால் வீட்டு ஆசை வர இரண்டு ஆண்டுகள் தேவை பட்டதென்றால், வெளிநாட்டு மோகம் வர ஒரு மாதமே ஆனது. ஆனால் இம்முறை சென்றால் அப்படி ஆகாதென்றே நினைக்கிறேன்.
நான் இந்தியாவில் இல்லாத சமயம் குடும்பத்தில் பல காரியங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சுப காரியங்களும் உண்டு சவ காரியங்களும் உண்டு. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் என் தந்தைக்கு இருதய சிகிச்சை நடந்த போது என்னால் அங்கு போக முடியாமல் போனது. சிகிச்சைக்கு பின்னர் நான் இன்னும் வீடு செல்லவில்லை. எனவே ஒரு குற்ற உணர்வு என்னுள் இன்றும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னுடைய இளைய சகோதரன் அப்போது உறுதுணையாக இருந்ததால் சிகிச்சை சிரமமின்றி முடிந்தது.
எனது சகோதரனை பற்றியும் சொல்லியாக வேண்டும். அவ்வப்போது சூர்யா அல்லது கார்த்தியின் நேர்காணல் தொலைகாட்சியில் வந்தால், சூர்யா தனது தம்பியை பற்றி மிக உயர்வாக பேசுவார். அவர்கள் இருவரும் பிரிந்து இருந்த காலங்கள் பற்றியும் அப்போது அவர்கள் பரிந்து கொண்ட கனிவான கடிதங்கள், உரையாடல்கள் பற்றியும் இருவருமே சுவராஸ்யமாக பேசுவார்கள். அது போன்றதொன்றுதான் எங்கள் உறவும். சகோதரர்களின் இடையே உள்ள உறவை பற்றி விளக்க ஒரு நல்ல வார்த்தை ஒன்று கண்டுபிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ரொம்பவும் உணர்ச்சிவசபட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன் ('விட்ரா விட்ரா சூனா பானா' என்கிறீர்களா என்ன ?). என் சொந்தக்கதை இருந்துவிட்டுப்போகட்டும் அடுத்த பதிவில் ஒரு ஜாலியான விஷயத்தைப்பற்றி கதைக்கிறேன்.